Sunday, February 15, 2009

Dhoorathil Irundhu Naan Paarkiren

தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன்
ஐந்து பெண்கள் வேகமாக ஓடுகிறார்கள்
இல்லை பெண்கள் இல்லை சிறுமிகள் , ஆனால் எங்கே ஓடுகிறார்கள் ?

தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன்
அவர்களுக்குள் ஏதோ போட்டி போலிருக்கும், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடுகிறார்கள்
தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன்
ஆனந்தமாக சிரித்துக்கொண்டே ஓடுகிறார்கள்
ஒரே சமையத்தில் எல்லோரும் கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடுகிறார்கள்

அவர்கள் ஏனோ காதை மூடிக்கொண்டு ஓடுகிறாகள்

சற்று அருகில் இருந்து பார்க்கிறேன்
அவர்களை யாரோ துரத்துவது தெரிகிறது
சிரித்த உதடுகள் என்று நினைத்த எனக்கு அதிர்ச்சி
அவர்களின் கண்களில் பீதி
அவர்கள் விளையாடவில்லை

மீண்டும் அருகில் சென்று பார்க்கிறேன்
அவர்களை சுற்றிலும் வெடிகுண்டுகள் சிதறுகின்றன
குண்டுகளிடம் இறையாகா வேண்டி ஓடுகிறார்கள்
தமிழர்களின் பிணங்களுக்கு மேல் கோபுரம் கட்ட துடிக்கும் வெறியர்களின் குண்டுகளுக்கு
இறையாகக்கூடாதென்று ஓடுகிறார்கள்

வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியவர்கள், இதோ குண்டுகளைத் தாண்டி ஓடுகிறார்கள்
புழுதிக் காற்று அவர்களை மறைத்து விட்டது

மீண்டும் தலைப்பச் செய்திகள் வாசிக்கப்பட்டது .....
என்ன ஆனதோ அவர்களுக்கு ?
தூரத்தில் இருந்து நான் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருக்கிறேன்

Monday, December 8, 2008

உன் இதயம் பேசுகிறேன்

வழக்கமான மாலை பொழுதில் மயில்வாகனன் தன் வீட்டின் மொட்டை மாடியில் புகை பிடித்து கொண்டிருந்தான். இது அவனின் வாடிக்கை. புகை பிடிக்கும் பழக்கம் அவனுக்கு கல்லூரி நாட்களிலே நட்புடன் சேர்ந்து வந்தது. அன்று விளையாட்டாக ஆரம்பித்தது , பின் குடியும் சேர்ந்து கொள்ள வாடிக்கை ஆனது.

இன்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பல அயிரம் தூண்களில் ஒன்றாக மாறியும் மாறாத பழக்கம்.

தன் நண்பர்கள் சிலர் தங்கள் திருமணம் முடிந்த கையோடு இப்பழக்கங்களை நிறுத்திக்கொண்டது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. திருமண வாழ்கையில் அவனுக்கு ஈடுபாடு இருந்தாலும் யாரோ ஒருவருக்காக தன் பழக்கங்களை மாற்றிக்கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

"டேய் மயிலு ஒழுங்கா தம்மு தண்ணியெல்லாம் விட்டுடுடா இல்லேனா கல்யாணத்துக்கு அப்றோம் ரொம்ப கஷ்டப்படுவ பாரு "


" அதெல்லாம் ஆகும் போது பாத்துக்கலாம் " - இது மயில்.

மயில் இதுநாள் வரை அதனை ஒரு பொருட்டாக எண்ணியதே இல்லை.ஆனால் இதோ அவன் பதற்றப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது.அலைபேசியில் அவன் அம்மா தான் பேசியது,

"மயில் ,அம்மா பேசறேன் பா , நீ உடனே கிளம்பி ஊருக்கு வா என்ன ?"

"என்ன விஷயம்னு சொல்லுமா ?"

"உனக்கு ஒரு பொண்ணு பார்த்தாச்சு பா.எனக்கும் அப்பாக்கும் ரொம்பப் புடிச்சிப்போச்சு. நல்லா லட்ச்சனமா, நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்கா. நீ கேட்ட மாதிரி பெங்களூர்ல தான் வேலைப் பாக்கறா. நீ இங்க வந்து பார்த்து சரின்னு சொன்னா போதும்."

"சரிம்மா ."

மயில் உடனே கிளம்பி தன் நண்பர்களை வழக்கமாக சந்திக்கும் கோரமங்களா டென்னிஸ் கிளப் விரைந்தான்.

"டேய் இந்த விஷயத்த பொண்ணு கிட்ட சொல்லலாமா வேண்டாமா . பொண்ணு வேற பெங்களூர் தானாம் , எனக்கு ரெண்டே ரெண்டு கெட்ட பழக்கம் தானே இருக்கு புரிஞ்சுக்க மாட்டாளா என்ன ? " - மயில்.

"இது தேவை இல்லாதது. விட்டு ஒழியேன் சிகரெட் பழக்கத்த. ஏன் நாங்க இல்ல ? மச்சி பொண்ணுங்க தண்ணி அடிக்கிறத கூட ஒத்துக்குவாங்க தம்மு ரொம்ப கஷ்டம்." - இது சபரி .


"ஏன்டா பயம் காட்டறீங்க? சரி அப்போ என்னதான் பண்றது. எப்படி நீங்க சமாளிசீங்க ? " - மயில்.

"நான் சொல்ற மாதிரி சொல்லு , 'எனக்கு தம், தண்ணி அடிக்கிற பழக்கம் எல்லாம் இருந்துச்சு ஆனா இப்போ சுத்தமா இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டு மாறியிருக்கேன் உனக்காகன்னு சொல்லு' " - ஆதி

"இப்படி எல்லாம் பொய் சொல்ல முடியாது , நானே ஏதாவது யோசிச்சுக்கறேன். நாளைக்கே நான் ஊருக்கு கிளம்ப போறேன். கல்யாண ஆசை எனக்கும் வந்திடுச்சு டா. "

மயிலுக்கு ரயிலில் தூக்கம் வரவில்லை. சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம். தன் நண்பர்களை பார்த்து அவனுக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தாலும் பெங்களூரில் வேலை செய்யும் பெண் தான் வேண்டும் என்று உறுதியோடு இருந்தான். இன்று அதுவும் கூடி வந்தது. அவளிடம் என்ன பேசுவது என்று பல முறை தனக்குள்ளே ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்ததில் ரயில் திருச்சி வந்தடைந்தது கூட தெரியவில்லை.

வீட்டில் அம்மா ஆவலுடன் காத்திருந்தாள்.

"வாப்பா போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம். வெளியே எங்கயும் இன்னிக்கு ஊர் சுத்தாதே, சாயந்திரம் 6 மணிக்கு பொண்ணு வீட்டுக்கு போறோம்."

"என்னது இன்னிகேவா போறோம்? "

மயிலுக்கு மேலும் வியர்த்து. தன் அறைக்குள் சென்று ஒத்திகை மேல் ஒத்திகை பார்த்துக்கொண்டான். கல்லூரி நாட்கள் முதல் பெண்களிடம் அதிகம் பழகாதவன் பாவம்.

மாலை 6 மணி. பெண் வீட்டில் கல்யாணக்கலை இப்பொழுதே தெரிகிறது. மயிலுக்கு ஆறு முறை தண்ணீர் குடித்தும் படப்படப்பு நின்ற பாடில்லை. பெரியவர்கள் எல்லாம் பேசி முடித்து பெண்ணை அழைத்தார்கள்.

வாணியை பார்த்தவுடனேயே முடிவு செய்துவிட்டான் இவள் தான் தன் வாழ்க்கைத் துணை என்று. தான் பேச நினைத்ததை மனதிற்குள் மீண்டும் ஒரு முறை ஏற்றினான். முன்பே பேசியது போல் அம்மா , வாணியும் மயிலும் தனிமையில் பேச ஏற்பாடும் செய்துவிட்டாள். இதோ மயில் எதிர்ப்பர்த்த அத்தருணம்.தன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

"எனக்கு உங்கள ஃபோடோ ல பார்த்த உடனேயே ரொம்ப பிடிச்சிருந்துச்சு . இப்போ நேர்ல பார்த்தப்போ நீங்க தான்னு முடிவே பண்ணிட்டேன் . ஒரு விஷயம் என் மனசுல உறுதிக்கிட்டே இருந்துச்சு சொல்லலாமா வேண்டாமான்னு ... ஆனா இப்போ உங்க கிட்ட மறைக்க மனசு இல்ல. ட்ரெய்ன் ல முழுக்க தூங்கமா உங்க கிட்ட பேசறதுக்காக நிறைய ஒத்திகை லாம் பார்த்துட்டு வந்திருக்கேன். எனக்கு சாதாரண விஷயமா இருக்கலாம், ஆனா நீங்க எப்படி எடுத்துப்பீங்களோன்னு தான் தெரியல. எனக்கு ரெண்டே ரெண்டு கெட்ட பழக்கம் இருக்கு. ஒன்னு தண்ணி அடிக்கிறது இன்னொன்னு தம் அடிக்கிறது. நான் யாருக்காகவும் என்ன மாத்திக்க மாட்டேன். எனக்கே என்ன நெனச்சா சிரிப்பா இருக்கு , ஏன்னா நான் காலேஜ் ல கூட இந்த மாதிரியெல்லாம் யாருக்காகவும் இவ்ளோ முயற்சி எடுத்ததில்ல, ஆனா ஏனோ உங்கள மிஸ் பண்ண மனசே வரல !!! நீங்க பெங்களூர்ல இருக்கீங்க, கண்டிப்பா புரிஞ்சுப்பீங்கன்னு தான் இந்த பொண்ணுப்பாக்கிறதுக்கே நான் சம்மதிச்சேன். நான் கண்டிப்பா இந்த பழக்கத்த நிறுத்த முயற்சி பண்றேன். என் ப்ரெண்ட்ஸ் சொல்லி நிறுத்தாத பழக்கம் தான், ஆனா உங்களுக்காக நிறுத்தினா தப்பில்லைன்னு தோணுது. என்ன நான் மட்டும் தான் பேசறேன் நீங்க பேசவே இல்ல ? பிடிக்கலைன்னா தாராளமா சொல்லுங்க பரவாயில்லை."
மயிலுக்கு தலையே சுற்றியது, ஏனென்றால் இம்முறை பேசியது அவன் இல்லை
!!!